அழகிய இலை ஓவியங்கள்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று வள்ளுவப் பேராசான் கூறியது போல் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். நெல் நடவு செய்ய ஏர் உழுதுவிட்டு மாடுகளை குளிப்பாட்ட ஏரி மற்றும் குளங்களில் நீந்த விடுவோம். அப்போது நீர் அலைகளில் ஏற்கனவே கரையில் உள்ள செடிகள் மரங்களின் இலைகளில் நீரில் விழுந்து அழுகிய நிலையில் இலையின் நரம்புகள் மட்டும் அழகாக இருக்கும். இதனை சேகரித்து புத்தகத்தில் வைத்துக் கொள்வேன்.

இப்படியாக ஆரம்பத்தில் தொடங்கிய பயணம் சிறு வயது முதல் ஓவியத்தில் நாட்டம் இருந்த காரணத்தால் இந்த இலைகளை வைத்து ஏன் புதியவற்றை செய்யக்கூடாது என யோசித்து வாழை இலை, தேக்கு இலை, ஆலமர இலை, பனை இலை என பலவற்றில் ஓவியம் வரையத் தொடங்கினேன். இப்படி தொடர்ந்து வரையும்போது தனக்கென்று தனி பானியை கையாள வேண்டும் என்ற ஆர்வத்தில் அரசமர இலை மிருதுவாகவும் வடிவத்தில் அழகாகவும் உள்ளதை பார்த்து வரைந்தேன். அப்போது ஒரு நாள் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் பார்த்து கீதையில் கிருஷ்ண பரமாத்மா தாவர இனங்களில் நான் அரசமரமாவேன் என்று கூறியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு ஆழ்வார்கள் தமிழில் பாடி தமிழையும் பக்தியையும் 108 வைணவ திவ்ய தேசங்களாக சாசனம் செய்துள்ளனர் இதனை முயற்சி செய் என்றார்.

இதனை நான் இறையருள் மற்றும் குருவருள் ஆணையாக கருதி ஒவ்வொரு திவ்ய தேச பெருமாள்களையும், 108 இலைகளில் வரைந்தேன். இதன் மூலம் ஏறக்குறைய 74 தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பயணத்தின் போது மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் செய்து விட்டு வரும்போது, தமிழில் சிவன் 64 திருவிளையாடல் செய்துள்ளதாக சிற்பங்களை கண்டேண். பிறகு பல்வேறு நூல்களை தேடி வரலாறு தெரிந்து 64 இலைகளில் காட்சிகளை படமாக்கினேன்.

இவ்வாறு பல நண்பர்களின் வாயிலாகவும், பெரியோர்களின் வாயிலாகவும் மேலும் சில சிறப்புகளை தெரிந்து கொண்டேன் அவை அரச மரத்தடியில் அமர்ந்துதான். மேலும் இந்த அரச மர இலையில் லஷ்மியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்றும் வாஸ்து தோஷம் நீங்கும் என்று கூறி சில அன்பர்கள் குறிப்பிட்டு வாங்கி சென்றார்கள்.

தற்போது படிப்படியாக வளர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இலை ஓவியம் ஆர்டர் தருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களின் படங்களை வரைய சொல்லி கேட்கின்றனர். இதுபோல அரசு மற்றும் தனியார் நிகழ்சிகள், மேலும் ஆன்மீக சான்றோர்கள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், ஆட்சிபணி அதிகாரிகள், நீதியரசர்கள், சினிமா கலைஞர்கள் என பல்வேறு அறிஞர் பெருமக்களை வரைந்து கொடுத்து வருகிறேன். இது மட்டுமல்லாமல், வீட்டு நிகழ்ச்சிகளான திருமண தம்பதிகள், பிறந்த  நாள் விழாக்கள் என பலவற்றிற்கு வரைந்து கொடுத்து வருகிறேன். இதன் மூலம் பல்வேறு பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைப்பதால் மேலும் வரைய ஊக்கமாக உள்ளது.

இரண்டு முறை ஏற்றுமதிக்கான வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பிட்டு என்ன கேட்கின்றனரோ  அதை வரைந்து கொடுத்துள்ளேன், என்னதான் திறமை இருந்தாலும் அதை ஏற்று மற்றவர்களின் ஒத்துழைப்பும் அனுகூலமும் கிடைக்க வேண்டும். அவ்வாறு பலபேரின் அனுபவமும் எனக்கு பாடமாக இருந்தது. இதில் இரண்டு பேரை குறிப்பிட விரும்புகிறேன்.

பல்வேறு நேரத்தில் தனிப்பட்ட முறையில் நெருக்கடியும் இன்னல்களும் ஏற்படும்போது தக்க சமயத்தில் தகுந்த ஆலோசனை கூறி இலை ஓவியத்தை ஊக்குவித்தவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ன் பேத்தியும் மற்றும் உலக சமுதாய சேவாசங்கத்தின் துணை தலைவருமான பிரமுக்குட்டி அம்மையார் அவர்கள். மற்றொருவர் பல்வேறு வகையான வாய்ப்புகளை கொடுத்து ஆக்கமான நற்சிந்தனைகளை கொடுத்து என்னை மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – தை வரைய வைத்து பாராட்டு வாங்கி கொடுத்த விசுவஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் திருமதி. கிரிஜா ஷேஷாத்ரி அவர்கள் இருவரையும் நன்றியுடன் நினைவு கூற விரும்புகின்றேன்.

ஒரு கலைஞனுக்கு பல நேரங்களின் மதிப்பும், மரியாதையும், பாராட்டுதலும் கிடைக்கும் பேறு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த இலை ஓவியத்தை பொருத்தவரை விற்பவருக்கும் சரி வாங்குபவருக்கும் சரி ஒரு நிறைவான மன மகிழ்ச்சியை தருகின்றது. சில நேரங்களில் எதிர்பார்ப்பதை விட கணிசமான தொகையும் கிடைக்கின்றது. இதற்கு பெரிய முதலீடு ஒன்றும் இல்லை, எந்த வித எந்திரமும் தேவையில்லை. திறமையுடன் நுணுக்கமும் இருந்து முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் அனைவரும் வரையலாம்.

என்னுடைய இந்த தொழில் அனுபவத்தை கொண்டு பாரம்பரிய கலையான இலை ஓவியங்களை என்னுடன் இல்லாமல் பலபேருக்கு சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என பலருக்கு பயிற்சியும் அளித்து வருகின்றேன் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தொடர்புக்கு G. Achuthan, Proprietor, G.S. Arts & Crafts Exports,

Email: achuthanarts@gmail.com, Mobile: 9884847404

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *