முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்!

ஆயிரக்கணக்கா நோட்டீஸ் அடிச்சு விளம்பரம் செய்வதைவிட நம்ம வொர்க்கைப் பத்தி மக்கள் நல்லவிதமா பேசறதுதான் முக்கியம்!…

தான் செய்யும் வேலைக்கும் தன் நிறுவனத்துக்கும் உண்மையாக இருக்க நினைக்கிற ஒருவர்… சின்ஸியராக வேலை பார்க்கிறார். ஆனால், அந்த நிறுவனம் அவருடைய உழைப்பை அங்கீகரிக்கவில்லை. மனம் வெறுத்துப்போய் வேலையை உதறிவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்குகிறார்.

கிராமத்திலிருந்து பெருநகரத்துக்கு வேலைக்கு வந்த அவர், தான் ஆரம்பித்த பிசினஸில் ஜெயித்தாரா, இல்லையா? என்பதுதான் கதை!” ஜான் வின்சென்டின் பிசினஸ் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு சினிமா எடுத்தால் இப்படி விறுவிறு ஒன் லைன் சொல்லலாம்.

ஜான் வின்சென்டுக்குச் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் காரக்கோட்டை கிராமம். பிழைப்புக்காக சென்னைக்கு வண்டி ஏறும் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒருவராக 2001-ம் ஆண்டு சென்னையில் காலடி எடுத்து வைத்த ஜான் வின்சென்ட், இப்போது ஏ.சி விற்பனையிலும் சர்வீஸிலும் சென்னையில் தடம்பதித்திருக்கும் தொழில்முனைவோராக உயர்ந்திருக்கிறார். திருவாரூர் டு சென்னை, தொழிலாளி டு முதலாளி… பயணம் குறித்து ஜான் வின்சென்டிடம் பேசினோம்.

“எங்க வீட்ல என் கூடப்பிறந்தவர்கள் ஆறு பேர், நான்தான் கடைசிப் பையன். ஓரளவுக்கு நிலபுலன்கள் இருந்ததால் பொருளாதார ரீதியான கஷ்டமெல்லாம் கிடையாது. சின்ன வயசிலிருந்தே நான் நல்லா படிப்பேன். ‘இப்போ ஏ.சி மெக்கானிக்குக்கு நல்ல டிமாண்ட் இருக்கு. வெளிநாட்டுக்கெல்லாம் போனா, நல்ல சம்பளம் கிடைக்கும்’ என என் ஸ்கூல் சீனியர் ஒருவர் சொல்ல, அப்பவே என் மனசுக்குள்ள ஒரு ஃபயர் பத்திக்கிச்சு. படிச்சா டிப்ளமோதான் படிப்பேன்னு அடம்பிடிச்சு படிச்சேன்.

படிச்சு முடிச்சதும் சென்னையில உள்ள என் சித்தப்பா வீட்டில் தங்கி வேலை தேடினேன். ஒரு ஏ.சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை கிடைச்சது. மாதம் 600 ரூபாய்தான் சம்பளம். சாப்பாட்டுக்கும் செலவுகளுக்குமே என் சம்பளம் இழுபறியா இருந்துச்சு. ஆனாலும், நான் அவற்றையெல்லாம் பொருள் படுத்தவில்லை. தொழில் கத்துக்கணும்ங்கிற ஆர்வத்துல கடுமையா உழைச்சேன். அடுத்த வருடம் என் சம்பளம் 850 ரூபாயாக உயர்ந்துச்சு.

ரெண்டு வருஷம் இப்படியே ஓடுச்சு. நேரம், காலம் பார்க்காம வேலை செஞ்சதால என் சம்பளம் 1,350 ரூபாயாக உயர்ந்துச்சு. ஞாயிற்றுக் கிழமைகளில்கூட நான் ஓவர்டைம் பார்த்ததால, இன்னும் 150 ரூபாய் உயர்த்திக் கேட்டேன். ஆனா, அதைத் தர அந்த நிறுவனம் தயாரா இல்லை. அது என்னை ரொம்பவே கஷ்டப் படுத்திடுச்சு.

அதன்பிறகு, என்னால் அங்கு வேலை செய்ய முடியவில்லை. சொந்தமா தொழில் தொடங்க முடிவெடுத்தேன். வீட்டிலிருந்து 25,000 ரூபாய் கொடுத்தார்கள். 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘Jesus Air Conditioning System’ என்ற பெயரில் கம்பெனியைத் தொடங்கினேன். நான் ரெண்டு வருஷம் நிறைய கஸ்டமர்களுக்கு சர்வீஸ் பண்ணியிருந்தாலும் எனக்கென தனியா ஒரு கஸ்டமர்ஸும் நான் உருவாக்கல. எப்படியாவது கஸ்டமர்களைப் பிடிக்கணும்னு 25,000 நோட்டீஸ் அடிச்சேன். என்னுடைய ஃபிரெண்ட்ஸை வரவெச்சு மக்கள் கூட்டமா உள்ள இடங்கள்ல அந்த நோட்டீஸ்களில் 15,000 நோட்டீஸ்களை விநியோகிச்சோம். ஆனா, ஒருவர்கூட வரவில்லை. 25,000 ரூபாயும் போச்சு. அதனால், அதற்குமேல் வீட்டில் கேட்கவும் எனக்கு மனம் வரவில்லை.

அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாத விரக்தி நிலை. அப்பதான் நான் ஏற்கெனவே வேலை பார்த்த கம்பெனியில் உள்ள ஒரு நண்பர் மூலமா ஒரு சர்வீஸ் கிடைச்சது. டீ குடிக்கக்கூட வழி இல்லாத சூழலில் முதல் ஆர்டர்… சந்தோஷம் பொங்க என் நண்பன் ஒருவனை அழைச்சுகிட்டு சர்வீஸுக்குப் போனேன்… அங்கே போனால் அதிர்ச்சி காத்திருந்தது. சாதாரணமா 600 ரூபாய் வாங்குற சர்வீஸுக்கு ‘வெறும் 100 ரூபாய்தான் கெடுப்பேன்’னு அந்த வீட்டிலிருந்த அம்மா சொன்னாங்க. முடியாதுன்னு திரும்பிப் போனா, அந்த 100 ரூபாயும் கிடைக்காது. முதல் கஸ்டமர் வேற. அதனால அந்த சர்வீஸைச் செய்ய சம்மதிச்சேன். காசு கம்மின்னாலும் பர்ஃபெக்ட்டா அந்த வேலையைச் செஞ்சேன். அது அவங்களுக்கு ரொம்பவும் பிடிச்சுப் போயிருச்சு. அதைப் பார்த்துட்டு, அவங்க இன்னொரு கஸ்டமரைத் தந்தாங்க. அங்கயும் போயும் சர்வீஸ் பண்ணிக் கொடுத்தேன். அவங்களுக்கும் என் வேலை பிடிச்சுப் போய் அவங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்ல, இப்படியே என் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சுது. ஆயிரக்கணக்கா நோட்டீஸ் அடிச்சு விளம்பரம் செய்வதைவிட நம்ம வொர்க்கைப் பத்தி மக்கள் நல்ல விதமா பேசறதுதான் முக்கியம்னு அப்பதான் தெரிஞ்சது.

இப்படியான தொடர்புகள் மூலம் இ.டி.ஏ (ETA) நிறுவனத்தில் ஒரு பெரிய தொடர்பு கிடைச்சது. அவங்க நிறைய இடங்களுக்கு ஏ.சி சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஏ.சி இன்ஸ்டாலேஷனுக்கு அவங்க எனக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. அவங்க கொடுத்த முதல் புராஜெக்ட்டை பக்காவா முடிச்சேன். அவங்களுக்கும் என்னுடைய வொர்க் பிடிச்சு போயிருச்சு. அவங்க அடுத்தடுத்து வேலை தர ஆரம்பிச்சாங்க. அப்படியே படிப்படியா வளர்ந்து அதில சம்பாதிச்ச பணத்தைச் சேர்த்து வெச்சு, 2007-ம் ஆண்டு வளசரவாக்கத்தில் ஏ.சி சேல்ஸுக்கு ஒரு ஷோரூமை ஓப்பன் செஞ்சேன்.

அவ்வளவு நாள் சர்வீஸில் மட்டுமே நான் கவனம் செலுத்தியதால், அந்த பிசினஸை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போறதுல நிறைய சிக்கல் இருந்தது. அப்பதான் பக்கத்து கடைக்காரர் மூலமா பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் பத்தி நான் தெரிஞ்சுகிட்டேன். நான் தொழிலை நல்லபடியா செய்றதுக்கு வழிகாட்ட எனக்கு ஒரு மென்டாரை நியமிச்சுக் கொடுத்தாங்க. அவர் கொடுத்த ஆலோசனையை வச்சு நான் செய்து வந்த சின்னச் சின்ன தவறுகளைச் சரிசெஞ்சேன். வளசரவாக்கத்தில் உள்ள ஷோரூமை மூடிவிட்டு 2018-ல் ‘JAS AC PLAZA’ என்ற பெயரில் அசோக்நகரில் ஒரு ஷோரூம் ஓப்பன் பண்ணினேன். இப்போ அது நல்லபடியாகச் செயல்படுகிறது. ஈக்காட்டுதாங்கலில் எங்கள் வொர்க் ஷாப் இருக்கிறது. இன்று எனது வொர்க் ஷாப்பில் 35 பேர் வேலை பார்க்கின்றனர். வருடத்துக்கு சுமார் 5,000 ஏ.சி-க்களை சர்வீஸ் செய்கிறோம். அதேபோல, எங்கள் ஷோ ரூமில் வருடத்துக்கு சுமார் 500 ஏசிக்கள் விற்பனை செய்கிறோம். ஆண்டுப் பராமரிப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 4,000 டன் ஏசிக்களைப் பராமரித்து வருகிறோம்” என்று உற்சாகத்துடன் சொல்லும் ஜான் வின்சென்ட் அத்துடன் நின்றுவிடவில்லை. தன் சொந்தப் பணத்தில், ஜாஸ் ட்ரையினிங் சென்டர் (குருகுலா ஸ்கில் டெவலப்மென்ட் ஸ்கீம்) என்ற பெயரில் பயிற்சிப் பட்டறை ஆரம்பித்து, அதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு ஏசி மெக்கானிக் இலவச பயிற்சி வழங்கி வருகிறார். பயிற்சி காலமான ஒரு வருடத்துக்கு தங்கும் இடமும் உணவும் இலவசமாகத் வழங்குவதுடன் மாதம் 2,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறார்.

ஜான் வின்சன்ட் தன் வெற்றியின் மூலம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்… ‘‘உங்களிடம் முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் நீங்கள் நிச்சயமாக சிறந்த தொழில்முனைவோராக ஆக முடியும்!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *