வாழை நார் ஹேண்ட்பேக் வற்றாத வருமானம்

எளிய முதலீடு:

ஒரு நபர் ஒரு நாளில் 3 பை வீதம் மாதம் 90 பைகள் பின்னலாம். 3 பை தயாரிக்க ஒரு கிலோ வாழை நார், 100 கிராம் சாயப்பவுடர் தேவை. செலவுகள் 200, உழைப்புக்கூலி 100 என உற்பத்திச் செலவுக்கு ரூ.300 செலவாகிறது. மாதம் 90 பைக்கு ரூ.9 ஆயிரம் செலவாகிறது.

வங்கி கடனுதவி:

வாழை நார் பை தயாரிப்பில் பெண்கள் பெரும்பாலானோர் ஈடுபடுவதால், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன. தொழில் துவங்க மானியமும் உள்ளதால் பெண்கள் குழுவாக இணைந்து இத்தொழிலை மேற்கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம்.

லாபம் ரூ.13 ஆயிரம்

ஒரு பையின் உற்பத்தி செலவு ரூ.100. பையின் டிசைனுக்கேற்ப ரூ.175 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யலாம். மாதத்துக்கு 90 பைகள் விற்றால் வருவாய் குறைந்தபட்சம் ரூ.15,750, அதிகபட்சம் ரூ.22,500. இதில் லாபம் மட்டும் ரூ.6,750 முதல் ரூ.13,500 வரை கிடைக்கிறது. கண்காட்சிகளில் சொந்தமாக ஸ்டால் போட்டு விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

எப்படி தயாரிப்பது?

மூலப்பொருட்கள்:

வாழை மட்டை, நார் பிரித்தெடுக்கும் இயந்திரம், உப்பு, சாயப்பொடி. கிடைக்கும் இடங்கள்: வாழை மட்டை விவசாயிகளிடம் கிடைக்கும். சாயப்பவுடர் பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும். நார் எடுக்கும் இயந்திரம் கோவை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் கிடைக்கிறது. ஆர்டர் கொடுத்தால் தயாரித்து கொடுப்பார்கள். இயந்திரம் வாங்க முடியாதவர்கள் பிளேடு வைத்து கையாலேயே வாழை மட்டையில் நார்களை உரிக்கலாம். வாழை நார் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.
கட்டமைப்பு: வீட்டின் வெளியே நார் உரிக்கும் இயந்திரம் வைக்கவும், நார்களை காய வைக்கவும், வீட்டினுள் பைகளை பின்னுவதற்கும் குறைந்தபட்ச இடம் போதும். இயந்திரத்தின் விலை ரூ.65 ஆயிரம். வீட்டில் வைத்து தொழில் செய்தால் இயந்திரம் தேவையில்லை.

தயாரிக்கும் முறை:

வாழைத்தண்டுகளில் உள்ள மட்டைகளை உரித்து எடுக்க வேண்டும். அவற்றை ஒன்றரை அடி அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். இயந்திரத்தில் மட்டைகளை சொருகினால் நார் நாராக வெளிவரும். அவற்றிலுள்ள நீரை பிழிந்து, வெயிலில் காய வைக்க வேண்டும். நாரின் இரு முனைகளையும் கயிற்றால் கட்டி வைக்க வேண்டும். 2 குடம் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 100 கிராம் தேவைப்படும் கலர் சாயப்பவுடர், ஒரு கிலோ உப்பு போட்டு சாயம் உருவாக்க வேண்டும். அதில் இரு முனைகளும் கட்டப்பட்ட நார்க்கட்டுகளை 5 நிமிடம் ஊற வைத்தால், சாயம் ஏறிய நார் கிடைக்கும். அவற்றை அரை மணி நேரம் உலர வைத்து, நூல், நூலாக பிரிக்க வேண்டும். அவற்றை கொண்டு பொருட்கள் தயாரிக்கலாம்.

எடை குறைவு ; புதுப்புது டிசைன்:

பிளாஸ்டிக் வயரால் பின்னப்படும் பைகள் எடை அதிகமாக இருக்கும். வளைந்து கொடுக்காது. வாழை நார் பைகள் எடை குறைவாக இருப்பதோடு துணியை போல் வளைந்தும் கொடுக்கும். அழுக்கானால் சோப்பு நீரில் ஊறவைத்து அலசினால் போதும். பளிச்சென்று புதுப்பொலிவு பெற்றுவிடும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வரும் காகிதப்பை நீண்ட நாள் உழைப்பதில்லை. ஆனால் வாழை நார் பைகள் நீண்ட காலம் உழைப்பவை. வண்ணமயமாக, ஸ்டைலாக உருவாக்கப்படும் வாழை நார் ஹேண்ட் பேக்குகளை பெண்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் விரும்புகின்றனர். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாவதால் கிராக்கி அதிகம் உள்ளது.

ஹேண்ட் பேக் மட்டுமல்ல காய்கறி, பழங்கள் ஆகியவற்றை காற்றோட்டமாக வைக்கக்கூடிய பை உள்பட அனைத்து வகை பைகளையும் வாழை நாரில் தயாரிக்க முடியும். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற டிசைனில் தயாரித்தால் தொழிலில் ஜொலிக்கலாம். தற்போது கல்லூரி மாணவிகளை பொருத்தவரை வாழை நார் பைகள் தான் புது பேஷனாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *