பாக்கு மட்டை பிளேட் தயாரிப்பு

பாக்கு மட்டை தயாரிப்பு, விற்பனையில் 20% லாபம்!!
paakku

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத பிளேட்டுகள் தயாரிக்கப்பட, இப்போது அது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க என பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைவு வீணான பொருள் விலைமதிப்பிற்குரிய பொருளாக மாறிவிட்டது.
இதன் காரணமாக, பாக்கு மட்டை தயாரிக்கும் தொழில் இப்போது கனஜோராக நடந்து வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஏதுவான தொழில் இது.

மூலப்பொருள்!

பாக்கு மட்டைதான் இந்த தொழிலுக்குத் தேவையான அதிமுக்கிய மூலப்பொருள். பாக்கு மட்டைகள் கேரளா, ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடக மாநிலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து கிடைக்கும் மட்டைகள் அதிக நீளம் கொண்டவை என்பதால் பெரும் பாலானவர்கள் அங்கு கிடைக்கும் பாக்கு மட்டையைத்தான் அதிகம் வாங்குகின்றனர்.

தயாரிக்கும் முறை!

பாக்கு மட்டையை சுத்தமான தண்ணீர் தொட்டியில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்து அதிலிருக்கும் அழுக்குகளை அகற்ற வேண்டும். சுத்தம் செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வேப்ப எண்ணெய் அல்லது மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து கொள்ளலாம். இதனால் மட்டைகளில் பூஞ்சை வருவது
தடுக்கப்படும். பிறகு அந்த மட்டைகளை சூரிய வெளிச்சத் திலோ அல்லது காற்றிலோ உலர வைக்க வேண்டும். ஆனால், மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது. பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக வரும். காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து பிரஸ் செய்யும்போது வெப்பத்தினால் மட்டை பக்குவப்பட்டுவிடும். சூடு தணிந்த பின்பு பிளேட்டுகளை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே கட் செய்து எடுத்து, சுத்தம் செய்தால் விற்பனைக்கு
ரெடி!
முதலீடு!

இந்த தொழில் செய்வதற்கு ஆறரை லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். இயந்திரத்திற்கு 4.50 லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும் தேவைப்படும். இந்த தொழிலுக்கான இயந்திரங்கள் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கிடைக்கின்றன.

ஃபைனான்ஸ்!

தொழிலைத் தொடங்கும் நிறுவனரின் மூலதனமாக 5%, அதாவது 33,000 ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும். வங்கியின் மூலம் 95%, அதாவது 6.18 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்!

இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 2.28 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மானியத் தொகை யானது இந்த தொழிலுக்கு வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத் திற்குப் பிறகு வரவு வைக்கப்படும்.

இயந்திரம்!

ஒரு யூனிட்டுக்கு ஐந்து விதமான இயந்திரங்கள் தேவை. இந்த ஐந்து விதமான இயந்திரத்திலிருந்து 4, 6, 8, 10, 12 இஞ்ச் அளவுகளில் பாக்கு மட்டை பிளேட் தயாரிக்க முடியும். மேனுவல், ஹைட்ராலிக் மற்றும் ஆட்டோமேட்டிக் என இயந்திரங் கள் பலவிதங்களில் இருக்கின்றன. இதில் மேனுவல் இயந்திரம் எனில் 90,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகும். ஹைட்ராலிக் இயந்திரம் 1,25,000 ரூபாயும், ஆட்டோமேட்டிக் இயந்திரம் எனில் 2.50 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் வரை ஆகும். ஒரு யூனிட் இயந்திரத்தை கொண்டு ஐந்து விதமான அளவுகளில் பிளேட்டு களைத் தயாரிக்கலாம்.

வேலையாட்கள்!

இந்த தொழிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் ஏழு நபர்கள் வரை வேலைக்கு தேவை. பெரும்பாலும் வீட்டிலிருப் பவர்களை வைத்தே இந்த தொழிலை செய்துவிடலாம்.

தயாரிக்கப்படும் அளவுகள்!

12 இஞ்ச் அளவு கொண்ட பிளேட் கல்யாண வீடுகளிலும், 10 இஞ்ச் பிளேட்டுகள் வளைகாப்பு விசேஷங்கள் மற்றும் சுற்றுலா தேவைகளுக்கும், 8, 6 இஞ்ச் பிளேட்டுகள் கோயில்களில் அன்னதானம் வழங்கவும், 4 இஞ்ச் பிளேட்டுகள் பிரசாதங்கள் வழங்குவதற்கும் பயன்படுகின்றன.

சந்தை வாய்ப்பு!

பிளாஸ்டிக் பொருட்களினால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மாற்றுப் பொருளாக பாக்கு மட்டை பிளேட்டுகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை இருப்பதும், வருங்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் தடைகளும் இந்த தொழிலுக்கு சாதகமான விஷயங்கள்.
ஃபேன்ஸி ஸ்டோர்கள், கேட்டரிங் நடத்துபவர்கள், உள்ளூர் விற்பனையாளர்கள் மட்டு மல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நிறைய வாய்ப்புண்டு. சுற்றுச்சூழலை பாதுகாக்க நினைக்கும் நாடுகளில் வருங்காலத்தில் இந்த பிளேட்டு களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சாதகங்கள்!

* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள். எந்தவிதமான செயற்கை வாசமும், கெமிக்கல் கலப்படமும் கிடையாது.
* கையில் வைத்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருப்பதால் பார்ட்டிகளிலும், பஃபே முறையில் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.
* மைக்ரோவேவ் அவனில் சமையல் செய்யும்போது உணவுகளை சூடுபடுத்த இந்த பிளேட்டுகளை பயன்படுத்தலாம்.
* விரும்பிய வடிவங்களில் தம்ளர், கிண்ணம் போன்ற வடிவங்களில்கூட இதைத் தயாரிக்கலாம்.

பாதகங்கள்!

மழைக் காலத்தில் பாக்குமட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, மழைக் காலத்திற்கு முன்பே பாக்கு மட்டையை வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் மூலப்பொருள் கிடைக்காமல் திண்டாடும் நெருக்கடியைத் தவிர்க்கலாம். அத்துடன் மழைக் காலத்தில் பாக்கு மட்டையில் பூஞ்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதனை தடுக்கும் விதமாக பாக்கு மட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

விற்பனைக்கான விலை!

12 இஞ்ச் பிளேட் ஒன்று 2.20 ரூபாய்க்கும், 10 இஞ்ச் 1.50 ரூபாய்க்கும், 8 இஞ்ச் 1.25 ரூபாய்க்கும், 6 இஞ்ச் 75 பைசாவுக்கும், 4 இஞ்ச் 50 பைசாவுக்கும் விற்பனை செய்யலாம்.
நல்ல எதிர்காலம் இருக்கும் இந்த தொழிலில் இப்போதே இறங்குவதுதான் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *