பொதுவாக எல்லா பெண்களும் தங்களை மிகவும் அழகாக வைத்துக்கொள்ள விரும்புவதே, இந்த தொழிலின் மூலதனம். பிறவியிலே கடவுள் அழகாக படைத்து விட்டாலும், மேலும் தங்களை அழகாக்க வேண்டி அவர்கள் அழகு நிலையங்களை நாடிச்செல்ல தயக்கம் காட்டுவதில்லை. அத்தகைய அழகு நிலையச் சேவைத் தொழில்தான், தன்னார்வமுள்ள, சுயமாய் சம்பாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒர் வரப்பிரசாதம். வெளியிலிருந்து பார்க்கும்போது, தலை சீவி பவுடர் போடும் கூடமாக தெரிந்தாலும், ஒவ்வொரு அழகு நிலையங்களும் சிறப்பான மற்றும் தனித்துவமான சேவைகளான பெடிக்யூர் (Pedicure) மெனிக்யூர் (Manicure) ஃபேசியல் (Facial) பிலிச்சிங் (Bleaching) வாக்சிங் (Waxing) திரெடிங் (Threading) மேக்-அப் (Make-up) ஹேர் ட்ரீட்மென்ட் (Hair Treatment) என வழங்குவதன் மூலம் சிறந்து விளங்குகின்றன. மேலை நாட்டுகளிலும், வட நாட்டுகளிலும், மெட்ரோ நகரங்களிலும் உள்ள பெண்கள் பெரிதும் விரும்புகின்ற இந்த தொழில், இப்பொழுது நம்மை அடுத்துள்ள இரண்டாம், மூன்றாம் நகரங்களிலுள்ள பெண்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. பெண்களின் ஆர்வமும், ஏகோபித்த வரவேற்பும் உள்ளதால், அழகுச் சேவை சார்ந்த இத்துறை, இன்று உலகளவில் பில்லியன் டாலர் துறையாக மாறி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் மாறிவரும் சந்தை பொருளாதாரச் சூழ்நிலையில் சிக்காமல், நிலையான வருமானத்தை தரக்கூடிய துறைகளில் இதுவும் ஒன்றாகும்.
இத்தொழிலை செய்ய விரும்பும் என்னைப் போன்றவர்களுக்கு, உதவியாக சில பயனுள்ளவைகளை என் அனுபவத்தில் கண்டதை இங்கே கூற விழைகின்றேன்.
முறையான பயிற்சி & அனுபவம்:
முதலில், உங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள ஏதாவது ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்து முறையாக பட்டயப்படிப்பை முடித்தல் வேண்டும். பொருளாதாரம் இல்லாதவர்களுக்கென, இப்பொழுது எத்தனையோ அரசு சார்ந்த, சாராத மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலவசமாக அழகுக் கலைப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. அதன்பின்பு, ஏதாவது ஒரு அழகு நிலையத்தில் உதவியாளராக சேர்ந்து சிறிது காலம் பணியாற்றுதல் நம்மை நாமே பண்படித்துக்கொள்ளவும், வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொள்ளவும் உதவும்.
தேவையான நிதி:
ரூபாய் 15000 முதல் 20000 வரையில் நம்முடைய வீட்டின் ஒரு அறையை வேண்டிய அடிப்படைப் பொருள்களுடன் நல்ல தொழில் கூடமாக மாற்றிக் கொள்ள இயலும். மேற்கொண்டு இடவசதி, நிதிவசதியைப் பொருத்து தேவையான உபகரணங்களையும் வாங்கி அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.
இடம் தேர்வு செய்தல், விளம்பரப்படுத்துதல்:
நாம் அழகு நிலையத்திற்கு என தேர்வு செய்கிற இடம், எளிதாக பெண்கள் வந்து செல்வது மாதிரியாக தெரிவு செய்தல் வேண்டும். ஆரம்பத்தில் துண்டு பிரசுரத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு நம்முடைய நிலையத்தின் பெயர் மற்றும் சிறப்பான சேவைப்பற்றி விளம்பரப்படுத்துதல் அவசியம். நல்ல சேவையை நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு தரும் பட்சத்தில், அவர்களின் மூலமாக மற்றவர்களுக்கு செல்லும் “வாய் மொழி விளம்பரமே” போதுமானது. வேண்டுமெனில், கைப்பேசி எண்ணுடன் கூடிய முகவரி அட்டைகளை (Visiting Card) வாடிக்கையாளர்களின் மூலம் கொடுத்துதவுவது, நம்முடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். தொலைக்காட்சி, வானொலி, இணையம், செய்தித்தாள் போன்றவைகளின் மூலமாக செய்யப்படும் டாம்பீக விளம்பரங்கள் தேவையற்றதும், நம்முடைய வீண்செலவுகளை தவிர்க்கவும் உதவும்.
நேரம் ஒதுக்குதல்:
நம்முடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வீட்டு அம்மணிகளாக இருக்கும்பட்சத்தில், நிலையத்தின் நேரத்தை மதியத்திற்கு மேல் அல்லது மாலை நேரமாக தினமும் 4 – 5 மணி நேரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மால் முடியுமெனில் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்றும் சேவைகளை தரலாம்.
சேவையின் தரம்:
இன்றைய சூழலில், போட்டியில்லாத தொழிலென்று எதுவும் இல்லை. எனவே, புன்முறுவலுடன் நாம் செய்யும் சேவையே, வாடிக்கையாளர்களுக்கு திருப்தி தருவதோடு, அவர்களின் அடுத்தடுத்த வரவு மட்டுமின்றி, புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்திற்கும் வழிவகுக்கும். எந்தெந்த அழகு சேவையில் நீங்கள் தேர்ந்தவரோ, அதை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு செய்வித்து திருப்தி அடையச் செய்யவேண்டும், அனுபவமில்லாத அழகு சேவையை செய்வதை தவிர்ப்பது நல்லது.
புதியன பழகுதல்:
நம்முடைய அருகாமையில் நடத்தப்படும் கருத்தரங்கம் (Seminar), பயிற்சி வகுப்புகள் (Training Programs) செய்முறைசாலை (Workshop) முதலியவற்றில் பங்கேற்பது, அனுபவ அறிவை மெருகூட்டுவதாக அமையும். மாறிவரும் நாகரீக உலகத்திற்கேற்றார் போல, புதியன வேண்டும் வாடிக்கையாளர்களின் ஆவலை பூர்த்தி செய்ய இயலும்.
மேற்கண்டவைகளை பின்பற்றி செய்யும் அழகுக்கலை சேவைத் தொழில், நம்மை போட்டி உலகத்தில் நிலைநிறுத்துவதோடு, நம் உழைப்பிற்கு தகுந்த லாபத்தையும் தருமென்பதில் ஐயமில்லை.
சுயதொழில் செய்யும் பெண்களாகிய நாம், நம்முடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன்மூலமும், வீட்டு நிர்வாகம் மற்றும் தொழிலை திறம்பட அமைத்துக் கொள்வதன்மூலமும், எடுத்த முயற்சியில் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.
தோற்றத்தை மட்டுமல்ல… நம் வாழ்வில் ஏற்றத்தையும் தரவல்ல அழகுக் கலை சேவைத் தொழில் சுயமாய் செய்வோம்… சுகமாய் வாழ்வோம்.